ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் தனது 22 ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை செர்பியாவின் நோவாக் ஜோக்கொவிச் வென்றுள்ளார்.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று பிற்பகல் நடந்தது. இதில் செர்பியாவைச் சார்ந்த 21 கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற ஜோகோவிச்சும் , கிரீஸ் நாட்டைச் சார்ந்த சிட்சிபாஸும் மோதினர். இப்போட்டியில் கிரீஸ் நாட்டின் சிட்சிபாஸ் ஐ 6-3, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் 3-0 என வீழ்த்தி ஜோகோவிச் அபாரமாக வெற்றிப்பெற்றார்.

இதுவரை 21 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றிருந்த ஜோகோவிச், ஆஸ்திரேலிய ஓப்பனில் 22 வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றதுடன் ரபேல் நடால் சாதனையை சமன் செய்துள்ளார்.
ஸ்பெயின் வீரரும், உலகின் தலை சிறந்த டென்னிஸ் வீரருமான ரபேல் நடால் இதுவரை 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். ஜோகோவிச் இதுவரை 9 முறை ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றிருந்த நிலையில், இத்துடன் 10 வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டத்தை வெல்கிறார்.
ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸில் இதுவரை யாரும் செய்திடாத சாதனையை ஜோகோவிச் செய்துள்ளார். இதற்கு முன்னதாக முன்னாள் வீரர் மற்றும் ஆஸ்திரேலிய மண்ணின் ராய் ஸ்டான்லி எமர்சன் 6 முறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களை வென்று அசத்தியிருக்கிறார்.
நடப்பு சாம்பியன் ரபேல் நடால் இரண்டாவது சுற்றிலேயே அமெரிக்கா வீரர் மெக் டொனால்ட் இடம் தோல்வியுற்று வெளியேறினார். இப்போது ஒட்டுமொத்தமாக 93 ATP பட்டங்களை வசப்படுத்திக் கொண்டுள்ளார் ஜோகோவிச்.
– யாழன்







