தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே, சொத்தில் பங்கு தராத மூத்த தாரத்து மகனை கொலை செய்து, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்த பெண் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெரியகுளம் அருகே உள்ள காமாட்சிபுரம் கிராமத்தில், சாலையோரம் உள்ள குப்பைத்தொட்டியில் எரிந்த நிலையில், ஆண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் சடலத்தை போலீசார் ஆய்வு செய்தபோது, உடலில் பலத்த வெட்டுக்காயங்கள் இருந்துள்ளன. விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த சிங்காரவேல் என்பவரின் முதல் தாரத்து மகன் செந்தில் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியேறிய செந்தில், வடமாநிலங்களில் சாமியாரைப் போல சுற்றித் திரிந்துவிட்டு, 6 மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
பின்னர், தனது பெயரில் இருந்த 4 ஏக்கர் நிலையத்தை விற்பனை செய்துள்ளார். அப்போது, தந்தை சிங்காரவேலின் இரண்டாவது மனைவியான ரத்தினகிரியும், அவரது மகன் செல்வகுமாரும், நிலத்தை விற்பனை செய்த பணத்தில் பங்கு கேட்டதாக கூறப்படுகிறது. செந்தில் அதற்கு மறுத்ததால் ஆத்திரமடைந்த ரத்தினகிரியும், செல்வகுமாரும், கூலிப்படை உதவியுடன் அவரை வெட்டிக் கொலை செய்ததுடன், சடலத்தை குப்பையில் வீசி பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரியவந்தது. இதையடுத்து, ரத்தினகிரி, செல்வகுமார் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.







