டெல்லியில் இரண்டு இளைஞர்கள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி உத்யோக் விஹார் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்று அதிகாலை இரண்டு இளைஞர்கள் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். இதைக்கண்ட அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் இருவரின் உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீஸார் விசாரணை நடத்தினர். அதன்முடிவில், கத்தி குத்தில் உயிரிழந்தவர்கள் ரோஹித் அகர்வால் (23), கன்ஷ்யம் (20) என அடையாளம் காணப்பட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸார் தெரிவிக்கையில், கொலை செய்யப்பட்ட இருவரும் சென்ற வாகனத்தின் மீது மற்றொரு வாகனத்தில் வந்தவர்கள் மோதியுள்ளனர். இதில் இருத்தரப்பினருக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறு கடைசியில் கத்திக்குத்தில் முடிந்துள்ளது என தெரிவித்தனர். இதையடுத்து கொலையாளிகள் இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.







