சிவகங்கையில் பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் – டிடிவி தினகரன் கண்டனம்..!

சிவகங்கை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு அமமுக பொதுச்செயளாலர் டி.டி.வி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயளாலர் டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 

”சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியிலிருந்த பயிற்சி மருத்துவர் மீது நோயாளி ஒருவரின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மருத்துவர் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் உட்பட அனைத்துவிதமான ஆதாரங்களைத் தாக்கல் செய்தபின்பும் நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல்துறையால் அதிருப்தியடைந்த பயிற்சி மருத்துவர்கள் ஒன்றிணைந்து போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

பேரிடர் காலங்களில் தொடங்கி பெருந்தொற்று காலம் வரை தன்னுயிரைப் பொருட்படுத்தாமல் பொதுமக்களின் உயிரைக் காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது  ஒட்டுமொத்த மருத்துவர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

எனவே, சிவகங்கை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும், அங்கு பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்  எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்”

என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.