நடிகர் என்றாலே ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும்; அப்படி தான் நான் இருக்கிறேன் என ட்ரிகர் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் அதர்வா தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள ட்ரிகர் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குனர் சாம் ஆண்டன், நடிகர் அதர்வா, நடிகர்கள் சின்னி ஜெயந்த், அருண் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய இயக்குனர் சாம் ஆண்டன் 15 நிமிடத்தில் என்னுடைய கதையை கேட்டு தயாரிப்பாளர் ஓகே சொல்லிவிட்டார் எனக் கூறினார். அதோடு இந்த படம் வெற்றி பெற்றால் அதற்கு நடிகர் அதர்வா தான் காரணம், ஏனென்றால் என்னை விட அதிகமாக இந்த படத்திற்கு உழைத்தவர் அதர்வா என்று கூறினார். அதேபோல் நடிகை தான்யா அர்ப்பணிப்பு உணர்வோடு இருந்ததாகவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசுகையில், என்னை அண்டர்ரேட்டட் இயக்குனர் என்று கமெண்ட் செய்தவர்களுக்கு நன்றி. தோனி, கோலி இருந்தாலும், நான் டிராவிட்டோடு இருந்து என் பணியை செய்து கொள்கிறேன். மேலும் தன்னோடு பணியாற்றிய துணை இயக்குனர்கள் அனைவரும் படம் இயக்கிவிடுவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
பின்னர் பேசிய நடிகர் அதர்வா இயக்குநர் சாம் உடன் இரண்டு படம் பண்ணியுள்ளேன், அவர் டென்ஷனாகி நான் பார்த்ததே இல்லை. இந்த படம் துவங்கியதில் இருந்தே ஒரு பாசிடிவ் வைப் எங்களுக்கு இருந்தது என்றும், அதுமட்டுமின்றி ஒரு நல்ல படம் செய்துள்ளேன் என்ற மன திருப்தி எனக்கு இந்த படம் கொடுத்துள்ளது என்றும் கூறினார். அதேபோல் அருண் பாண்டியன் சின்னி ஜெயந்த், ஆகியோர் எனது அப்பாவோடு நடித்ததை பார்த்துள்ளேன். தற்போது அவர்கள் என்னோடு நடித்துள்ளனர், அப்போது எப்படி பார்த்தேனோ, அப்படியே இப்போதும் இருக்கின்றனர்.
நடிகர் சின்னி ஜெயந்த் பேசுகையில் என் அன்பு மகன் அதர்வா என்று தொடங்கி என் 38 வருட திரைப்பட வாழ்வில் ஒரு சில நல்ல படங்களை நடித்துள்ளேன். அதில் மிகவும் சிறந்த படமாக “ட்ரிகர்” படம் இருக்கும் என்றார். இயக்குனர் சங்கரும், கே.எஸ்.ரவிக்குமாரும் இணைந்த ஒரு இயக்குனர் சாம் ஆண்டன் என புகழாரம் சூட்டினார். மேலும் நடிகர் முரளியுடன் 22 படம் நடித்துள்ளேன், அதர்வா உடன் முதல் படத்தில் நடித்து உள்ளேன். தமிழ் சினிமாவில் பைட் சீன் என்றால் கேப்டன் விஜயகாந்த், ஆக்ஷ்ன் கிங் அர்ஜுன் தான், இவர்களுக்கு அடுத்தது அதர்வாவை தான் பார்க்கிறேன் எனக் கூறினார். அதோடு இந்த படத்திற்கு பிறகு அதர்வாவை ஜூனியர் கேப்டன் என்று மக்கள் அழைப்பார்கள். இந்த படத்தின் வெற்றி விழா மிக அருகில் உள்ளது. வெற்றிவிழாவில் உங்களை சந்திக்கிறேன் என தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதர்வா தான் நடித்த அனைத்து படங்களை விட இதில் மாறுபட்ட அதர்வாவை பார்க்க முடியும் என்று கூறினார். மேலும் வாரிசு நடிகர் என்பதால் மட்டுமல்ல, நடிகர் என்றாலே ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும். அப்படி தான் நான் இருக்கிறேன் என அவர் தெரிவித்தார்.







