அசாம் மாநிலம் விமானப் படை தளத்திலிருந்து நேற்று மாலை புறப்பட்ட இந்திய விமானப் படையின் சுகோய்-30 ரக போா் விமானம் புறப்பட்டது. அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடன் தொடா்பிழந்து மாயமானதாக தகவல்கள் வெளியானது. இதனிடையே காணாமல் போன போர் விமானத்தை தேடும் பணி மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து, பயிற்சிப் பணியில் ஈடுபட்டிருந்த விமானம், ஜோர்ஹட்டிலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள அசாமின் கர்பி அங்லாங் பகுதியில் விபத்துக்குள்ளானது என்று விமானப்படை தெரிவித்தது. இந்த நிலையில், அசாமில் ஏற்பட்ட விபத்தில் விமானப்படை வீரர்கள் இருவர் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
இது குறித்து விமானப்படை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “சுகோய் சூ 30 விபத்தில் படுகாயமடைந்த ஸ்கொட்ரன் லீடர் அனுஜ் மற்றும் விமான லெப்டினன்ட் பூர்வேஷ் துரக்கர் ஆகியோரின் இழப்பை இந்திய விமானப்படை ஒப்புக்கொள்கிறது. இந்திய விமானப்படையின் அனைத்து பணியாளர்களும் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறார்கள், மேலும் இந்த துயரமான நேரத்தில் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருடன் உறுதியாக நிற்கிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.







