அஸ்ஸாம் மாநிலம், நாகாவனில் சிவன் வேடத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இளைஞர் ஒருவர் நூதனமான முறையில் தெருக்களில் நாடகம் நடத்தினார்.
அவருடன் பார்வதி வேடத்தில் இளம்பெண் ஒருவரும் அந்த நாடகத்தில் நடித்தார். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சிவன் வேடத்தில் நாடகம் நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார். நாகாவனில் காலேஜ் சவுக் பகுதியில் நேற்று பேர் சிவன்-பார்வதி வேடத்தில் பைக்கில் வந்தனர்.
அப்போது இருவரும் அந்தப் பகுதியில் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு, எரிபொருள், உணவுப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெருவில் இறங்கி நாடகம் நடத்தினர்.
அவ்வழியே சென்றவர்கள் அவர்களின் நாடகத்தை பார்த்துவிட்டு கடந்து சென்றனர். இவர்களின் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. அங்கிருந்து படா பஜார் பகுதிக்குச் சென்று இதேபோன்று நாடகத்தை இருவரும் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இதுதொடர்பாக நாகாவன் சடார் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில், சிவன் வேடத்தில் நாடகம் நடத்தியவர் கைது செய்யப்பட்டார்.








