ஆசிய பாரா விளையாட்டு: துளசிமதிக்கு வெள்ளிப் பதக்கம் – உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!

வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு வாழ்த்து தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், மேலும் அவர் பல சாதனைகளைப் படைத்து, தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கட்டும் என வாழ்த்தியுள்ளார்.

ஜப்பானின் ஆய்ச்சி – நகோயாவில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களை வென்று வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தைச் சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன், ஒற்றையர் பிரிவில் சிறப்பாக விளையாடி வெள்ளிப் பதக்கத்தைத் தட்டிச் சென்றுள்ளார்.

இது குறித்து, உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியின் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசனுக்கு வாழ்த்துகள். இறுதிப் போட்டியில் சீனாவின் பாராலிம்பிக் சாம்பியனுக்கு எதிராக அவர் சிறப்பாகப் போராடினார்.

மேலும், கலப்பு இரட்டையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளின் இறுதிப் போட்டிகளில் சீனா மற்றும் இந்தோனேசிய வீராங்கனைகளை எதிர்கொள்ள உள்ள அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். துளசிமதி தொடர்ந்து சாதனைகளைப் படைத்து, தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கட்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.