330 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு : மத்திய சுகாதாரத் துறை அறிக்கை!

330 மருந்து மாதிரிகள் தரமற்றவை என மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

வழக்கமான மருந்து ஒழுங்குமுறை கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, செப்டம்பர் 2026 மாதத்திற்கான தரமற்ற மருந்துகள் (NSQ – Not of Standard Quality) மற்றும் போலி மருந்துகள் குறித்த விவரங்களை மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) வெளியிட்டுள்ளது.

இதன்படி, மத்திய அரசு மருந்துப் பரிசோதனை ஆய்வகங்கள் 42 மருந்து மாதிரிகள் தரமற்றவை எனக் கண்டறிந்துள்ளன. அதேபோல், மாநில அரசு மருந்துப் பரிசோதனை ஆய்வகங்கள் 288 மருந்து மாதிரிகளைத் தரமற்றவை என அடையாளம் கண்டுள்ளன. மொத்தம் 330 மருந்து மாதிரிகள் தரமற்றவை என அறிவிக்கப்பட்டுள்ளன.

மருந்துகளுக்கான குறிப்பிட்ட தர அளவுருக்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் தோல்வியடைந்ததன் அடிப்படையில், அவை தரமற்ற மருந்துகளாக வகைப்படுத்தப்படுகின்றன.இருப்பினும், இந்த முடிவுகள் பரிசோதனை செய்யப்பட்ட குறிப்பிட்ட மருந்தின் குறிப்பிட்ட தயாரிப்புத் தொகுதிக்கு (Batch) மட்டுமே பொருந்தும். இதனால், சந்தையில் விற்பனை செய்யப்படும் அதே மருந்தின் மற்ற தயாரிப்புத் தொகுதிகளும் தரமற்றவை எனக் கருத வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், டெல்லி தேசிய தலைநகர் பிரதேசத்தில் (NCT Delhi) ஒரு போலி மருந்து மாதிரியும் கண்டறியப்பட்டுள்ளது. வேறொரு நிறுவனத்துக்குச் சொந்தமான பிராண்ட் பெயரைப் பயன்படுத்தி, அங்கீகாரம் பெறாத உற்பத்தியாளர்களால் இந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட சட்டங்கள் மற்றும் விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தரமற்ற மற்றும் போலி மருந்துகளைக் கண்டறிந்து சந்தையிலிருந்து அகற்றுவதற்காக, மாநில மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் இணைந்து இத்தகைய கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதே நோக்கமாகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.