”அமைச்சர் செந்தில் பாலாஜியை மனிதாபிமானமற்ற முறையில் கீழே தள்ளி டார்ச்சர் செய்துள்ளனர்“ என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான முந்தைய அதிமுக ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் போக்குவரத்து துறை முறைகேடு குற்றச்சாட்டை அடுத்து அமலாக்கத்துறை அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் நெஞ்சு வலியில் கதறி அழுததை அடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை நிறைவடைந்ததையடுத்து அவருக்கு இதயத்தின் மூன்று முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்ப்பட்டுள்ளதால உடனே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய தீவிரம் காட்டிய நிலையில் இன்று மாலை நீதிபதி அல்லி ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வருகை தந்தார். மருத்துவமனையில் எந்த வாதங்கள் நடைபெறவில்லை. நீதிமன்றத்தில் வாதங்கள் வைத்துக் கொள்ளலாம் என நீதிபதி அல்லி தெரிவித்தார். மேலும் ஆதாரங்களின் அடிப்படையில் அவர் உடல்நிலை குறித்து தான் விசாரித்து வருகிறோம் என்றும் நீதிபதி அல்லி தெரிவித்தார்.
இந்த நிலையில் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த செந்தில் பாலாஜி மனுவை நிராகரித்து, நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். இதன்பிறகு அமலாக்கத்துறை விசாரணையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்கப்படுவதாக சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்ற அமர்வு அறிவித்தது.
இந்த நிலையில், திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
” அதிகாலையில் செந்தில் பாலாஜியை பார்த்தபோது துடிதுடித்துக் கொண்டிருந்தார். அவரை கைது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே அமலாக்கத்துறையினர் இருந்தனர். அறுவை சிகிச்சைக்கு முன்வராமல் கைது செய்வதற்காகவே அமலாக்கத்துறை செயல்பட்டது. மாற்றுக் கருத்தை பெறுவதற்காகவே இஎஸ்ஐ மருத்துவர்களை வரவைத்தது.
இஎஸ்ஐ மருத்துவர்களும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த சான்றிதழையே ஏற்றுக் கொண்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லையென்றால் செந்தில் பாலாஜி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி இன்றே அழைத்துச்செல்லப்படுவார். மனிதாபிமானமற்ற முறையில் 18 மணி நேரம் உணவு கொடுக்காமல், கீழே தள்ளி, டார்ச்சர் செய்துள்ளனர் “ என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.








