இந்திய ராணுவத்தின் முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக இந்திய ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம்.நரவானே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த டிச.8ம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்த நிலையில், பணிமூப்பு அடிப்படையில் முப்படைகளின் தளபதிகள் குழுவின் தலைவராக இந்திய ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம்.நரவானே நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த செப்.30 மற்றும் நவ.30 ஆகிய தேதிகளில் இந்திய விமானப்படையின் தலைமை தளபதியாக ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுதாரி மற்றும் கடற்படை தளபதியாக அட்மிரல் ஆர்.ஹரி குமார் ஆகியோர் பொறுப்பேற்றனர்.
பிபின் ராவத் தலைமை தளபதியாக பதவி உருவாக்கப்படுவதற்கு முன்னர் முப்படைகளின் தளபதிகள் இணைந்து குழு உருவாக்கப்பட்டது. இந்த குழுவே முப்படைகளின் தலைமைத் தளபதியை தேர்ந்தெடுத்தது.
அதேபோல தற்போது இந்த குழுவின் (CoSC) தலைவராக எம்.எம்.நரவானே நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக கடந்த டிச.8ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதில் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வந்த விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








