மேகதாது விவகாரத்தில் எந்த மாநிலத்திற்கும் ஆதரவாக ஆணையம் செயல்படாது என்றும், தங்களை யாரும் நிர்பந்திக்க முடியாது என்றும் ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் 387.60 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை மற்றும் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. 95 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு. மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி,செளந்தர பாண்டியன்,ஸ்டாலின் குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் புதிதாக கட்டப்பட்டுள்ள கதவணையை வரும் 26ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என தெரிவித்தார்.
இந்த புதிய பாலம் பழைய பாலம் போலவே குறுகலான பாலமாக திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கருணாநிதி மாயனூர் பாலத்தை கட்டியபோது இருவழிப் பாதையாக இருக்கும் வகையில் கட்டினார் என்றும் ஆனால் இது குறுகளாக ஒரு வழிப்பாதையாக தான் உள்ளது என்றும் அவர் கூறினார்.
திருச்சியில் புதிய காவிரி பாலம் கட்ட ஏற்கனவே 90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. தற்போது 130 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் திருச்சி நகரின் காவிரி ஆற்றில் புதிய பாலம் மற்றும் எக்பிரஸ் எலிவேட்டர்-வே உள்ளிட்ட திட்டங்கள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
இதேபோல், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹல்தர் தஞ்சை மாவட்டம் கல்லணை பகுதியில் உள்ள வெண்ணாறு,கொள்ளிடம்,காவிரி அணைகளை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகத்தாட்டு உள்ளிட்ட அணை விவகாரங்கள் குறித்து விவாதிக்க காவேரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு முழு அதிகாரம் இருக்கிறது என்றார்.
வரும் 23 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் மேகத்தாட்டு குறித்து நிச்சயம் விவாதிப்போம் என்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என்பது சுதந்திரமான அமைப்பு என்றார். நாங்கள் எந்த மாநிலத்திற்கும் ஆதரவாக இல்லை என தெரிவித்த ஹல்தர், யாரும் எங்களை நிர்பந்திக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்








