ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசியதை ‘It is a fact’ என பண்ருட்டி ராமச்சந்திரன் கூறிய நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, பேரறிஞர் அண்ணா குறித்தும் ஜெயலலிதா குறித்தும் விமர்சித்த நிலையில் பாஜகவுடனான கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் அண்ணாமலையின் பேச்சுக்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூட்டாக நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினர்.
அப்போது ஜெயலலிதா பற்றி பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஊழல் குற்றச்சாட்டை சுமத்தினாரே என்று செய்தியாளர் கேட்டதற்கு பதிலளித்த பண்ருட்டி ராமச்சந்திரன், “அது உண்மை. அவர் முதலமைச்சராக இருந்தபோது ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டார்கள் என்பது உண்மை. அது பிடிக்கிறதா? பிடிக்கவில்லையா? என்பது வேறு. கடவுளையே குறை சொல்லும் நாடு. அவர் ஊழல் குற்றவாளி என்பதை நீங்கள் ஏற்கவில்லை, நாங்கள் ஏற்கவில்லை என்பது இல்லை. ஆனால், அது உண்மை. அந்த தீர்பை நாங்கள் ஏற்கவில்லை. அந்த தீர்ப்பு சரியாக வரவில்லை என்பது என் கருத்து.” என்றார்.
இந்நிலையில், ஜெயலலிதா ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டார் என்பது உண்மை என பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது X தள பக்கத்தில் பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசிய கருத்தை பண்ருட்டி ராமச்சந்திரன் ‘It is a fact’ என சொல்கிறார். அடுத்தவர் பேச அமைதி காத்தார். அருகில் இருப்பவரை பேசவும் அனுமதிக்கிறார் என்று ஓ.பன்னீர்செல்வத்தையும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக சாடியுள்ளார்.







