ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி – விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க தாம்பரம் ஆணையருக்கு டிஜிபி உத்தரவு!

ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக் புகார் எழுந்ததையடுத்து இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி “மறக்குமா நெஞ்சம்” என்ற பெயரில்,…

ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக் புகார் எழுந்ததையடுத்து இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி “மறக்குமா நெஞ்சம்” என்ற பெயரில், சென்னை பனையூரில் ஏ.ஆர்.ரகுமானின் இசை கச்சேரி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் மழை காரணமாக இந்த கச்சேரி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் மற்றோரு தேதியில் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது

இதனைத் தொடர்ந்து செப்.10  ஆன நேற்று  மாலை நிகழ்ச்சி நடைபெறும் என மறுதேதி குறித்த அறிவிப்பை ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்திருந்தார். திட்டமிட்டபடி சென்னை கிழக்கு சாலையில் உள்ள பனையூருக்கு அருகே இந்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக வெள்ளி, தங்கம், வைரம், பிளாட்டினம் என ரூ.2000 முதல் ரூ. 15 ஆயிரம் வரை டிக்கெட் பதிவு நடைபெற்றது.

டிக்கெட்டை பெற்றுக் கொண்ட ரசிகர்கள்  இசைக்கச்சேரி நடைபெறும் இடத்திற்கு சென்றனர். ஆனால்  சரியான பார்க்கிங் வசதி செய்யப்படாததால் பல மணி நேர காத்திருக்குப் பின்பே நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் சென்றதாக ரசிகர்கள் குற்றம்சாட்டினர்.

இதேபோல  ரூ.5,000 மதிப்புள்ள டிக்கெட் வைத்திருந்த ரசிகர்கள் பலருக்கு இருக்கைகள் கிடைக்கவில்லை எனவும் கூட்டத்திற்குள் சிக்கி வெளியே வர முடியாமல் பலரும் திணறியதாகவும் ரசிகர்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு குற்றம்சாட்டி வருகின்றனர்.

பல மணிநேரமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஒருவழியாக உள்ளே சென்ற போதும் டிக்கெட் இருந்தும் இருக்கைகள் கிடைக்கவில்லை எனவும் ஏ.ஆர்.ரஹ்மான் இதற்கு பதில் சொல்லியே தீர வேண்டும் என ரசிகர்கள் கடும் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.

சமூக வலைதளங்கள் கடும் கண்டனம் எழுந்த நிலையில் இதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி ஈவண்ட் நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது..

“மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் எதிர்பார்க்காத அளவுக்கு வந்த ரசிகர் கூட்டத்தால் இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. அதிகமான மக்கள் கூடியதால் ஏற்பட்ட நெரிசலின் காரணமாக கலந்து கொள்ள இயலாத ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கான முழுப் பொறுப்பை நாங்களே ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளனர்.

https://twitter.com/arrahman/status/1701121511736684911

இதனைத் தொடர்ந்து இதற்கு பதிலளிக்கும் விதமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளதாவது..

“ சென்னை மக்களே.. யாரெல்லாம் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லையோ அவர்கள் தங்களது டிக்கெட்டின் நகலையும் உங்களது கருத்துக்களையும்  arr4chennai@btos.in என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். எங்களது குழு உங்களை தொடர்பு கொண்டு விரைவில் அவற்றிற்கு பதிலளிக்கும்” என ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சி குளறுபடி தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க தாம்பரம் காவல் ஆணையருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனத்திடம் விசாரணை நடத்தவும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.