”இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிக்கு ஏ.ஆர்.ரகுமானை பொறுப்பாக்க முடியாது!” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் நடைபெற்ற குளறுபடிக்கு ஏ.ஆர்.ரகுமானை பொறுப்பாக முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்…

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் நடைபெற்ற குளறுபடிக்கு ஏ.ஆர்.ரகுமானை பொறுப்பாக முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும்
நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர்
ஜெயக்குமார் நடப்பு அரசியல் நிகழ்வுகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது ஜெயக்குமார் பேசியதாவது:

திமுக அரசின் டாஸ்மாக் வருவாய் அதிகரித்துள்ளது. சொத்துவரி, மின் கட்டணம்
உயர்ந்துள்ளது. பதிவுத்துறை கட்டணம் உயர்ந்துள்ளது. இருந்த போதும் தமிழ்நாட்டின் கடன் உயர்ந்து வருகிறது. டாக்டர் எம்.ஜி.ஆர் தமிழ்நாடு மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கு எதற்கு கருணாநிதி பெயர்? அலிபாபவும் 40 திருடர்களையும் போல் தமிழ்நாடு அமைச்சரவை உள்ளது.

அதனால் தான் அமைச்சருக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில்
அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. தார்மீக அடிப்படையில் அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க கூடாது என நீதிமன்றம் கொட்டு வைத்த பின்னரும் கூட, காது கேட்காதவர் போல உள்ளனர்.

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் 2 லட்சத்திற்கும் மேலான லாரிகள்
சட்டத்திற்கு விரோதமாக மண் அள்ளி உள்ளனர். நிலவுக்கு சந்திரயான் அனுப்பியதற்கு பதிலாக அமைச்சர் பொன்முடி சட்டவிரோதமாக மணல் எடுத்த லாரிகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கினாலே போதும் நிலவுக்கு சென்று விடும்.

அரசுக்கும் ஆட்சிக்கும் சாதகமான கருத்தை தெரிவித்தால் விட்டுவிடுவார்கள். சீமான் தற்போது ஆட்சிக்கு எதிராக பேசுவதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்கிறார்கள்.
சீமான் வழக்கில் நடிகை விஜயலட்சுமி பகடைகாயாக பயன்படுத்துகிறார்கள். இதே சீமான் அரசுக்கு ஆதரவாக இருந்திருந்தால், விஜயலட்சுமி மனு குப்பையில்
போட்டிருப்பார்கள்.

எங்கள் மீதும் வழக்கு போட்டு நடவடிக்கை எடுக்கிறார்கள். வெளியே வந்து இந்த
அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வருகிறோம். பழிவாங்கும் நடவடிக்கையாக எதிர்த்து பேசுபவர்கள் மீது இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவமனைக்கு சென்றால் நலம் பெற்று வருவோம் என
இருந்த நம்பிக்கை, தற்போது காலோடு போனால் உயிர் இருக்காது என்பது போல் உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கேடு காரணமாக கொலைகள் அதிகரித்துள்ளது. காவல்துறையை செயல்பட விடாமல் வைத்துள்ளனர். தமிழ்நாடே போதை மாநிலமாக உள்ளது.

அமைச்சர் உதயநிதி கொசுவத்தி சுருள் படம் பதிவிட்டதற்கு காரணம்,
திமுக அரசில் சுகாதாரம் சீர்கேடாக உள்ளது. கொசு அதிகம் பரவி உள்ளது. இந்த அரசு
அதனை கட்டுப்படுத்த தவறியுள்ளது என்பதை சொல்லும் விதமாக இந்த பதிவை
போட்டுள்ளார்.

ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் புகார் மனு பெட்டிகளை ஊர் ஊராக கொண்டு சென்றார்.
அதில் எத்தனை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. எத்தனை மனுக்கள் மீது நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை இதுவரை வெளியிடவில்லை.

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் நடைபெற்ற குளறுபடிக்கு ஏ.ஆர்.ரகுமான் பொறுப்பாக
முடியாது. நிகழ்ச்சி நடத்துபவர்கள் முறையாக திட்டமிட்டிருக்க வேண்டும். இதே வேளையில் காவல்துறை முன்கூட்டியே எத்தனை நபர்கள் வருவார்கள் என
முன் திட்டமிடல் செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் இந்த ஆட்சியில் தான் காவல்துறை செயல்படாமல் உள்ளதே.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.