மாடு கடத்தல் வழக்கில் கைதான திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அனுப்ரதா மண்டலை வரும் 20ந்தேதி வரை சிபிஐ காவலில் விசாரிக்க, நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
ஊழல் வழக்குகளில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய நிர்வாகிகள் சமீபத்தில் அடுத்தடுத்து கைது செய்யப்படுவது அக்கட்சிக்கும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் மேற்கு வங்க அமைச்சராகவும் திரிணாமுல் காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் விளங்கிய பார்த்தா சாட்டர்ஜி ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள், திரிணாமுல் காங்கிரசின் பிர்பும் மாவட்டச் செயலாளரும் அக்கட்சியின் பாகுபலி என வர்ணிக்கப்பட்டவருமான அனுப்ரதா மண்டல் மாடு கடத்தல் வழக்கில் சிபிஐயால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சிபிஐ அனுப்பிய சம்மன்களை அடுத்தடுத்து புறக்கணித்து விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த நிலையில், இன்று அவரது வீட்டிற்கு மத்திய ரிசர்வ் போலீசார் உதவியுடன் சென்ற சிபிஐ அதிகாரிகள் அனுப்ரதா மண்டலை அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து அனுப்ரதா மண்டலை அசோன்சால் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கேட்ட நிலையில் ஆகஸ்ட் 20ந்தேதி வரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.








