அதிமுக சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சத்திய நாராயணன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.
தி.நகர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சத்திய நாராயணன் என்பவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னையில் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கும் அதிகமான சொத்துக் குவிப்பு செய்ததாக குற்றச்சாட்டுக்கு சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான இடங்களான சென்னையில் 16 இடங்களும் கோயம்புத்தூரில் ஒரு இடமும் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு இடமும் என சோதனை நடைபெற்று வருகிறது.
இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக 16 புள்ளி 33 சதவீதம் சொத்துக்கள் சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு 3 கோடியே 21 லட்சம் மதிப்புள்ள 21 சொத்துக்களை வைத்திருந்தார். 2021 ஆம் ஆண்டு 16 கோடியின் 44 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 38 சொத்துக்களை வைத்திருப்பது தெரியவந்தது
2016 மற்றும் 2021 ஆம் ஆண்டு தேர்தலுக்கு விண்ணப்பிக்கும் போது சமர்ப்பித்த சொத்து பட்டியலில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக்கள் மற்றும் மதிப்பின் விவரத்தை எடுத்துள்ளது. இதை ஆய்வு செய்து பார்க்கும் பொழுது 2 கோடியே 64 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு காலகட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது தில் சத்திய நாராயணன் இந்த சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதேபோல அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்தியம் மற்றும் அவரது மனைவி மகள்கள் மீதும் சொத்துக்களை குவித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.







