கார்பரேட் நிறுவனத்திற்கு எதிராக போராடும் கலகத் தலைவன்- விமர்சனம்

கார்பரேட் நிறுவனத்திற்கு எதிராக போராடும் ஒரு சாமானியனின் வலியை எடுத்துரைக்கும் படம் தான் கலகத் தலைவன். இந்த திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த பதிவில் பார்க்கலாம். உதயநிதி நடிப்பில், மகிழ்திருமேனி இயக்கத்தில் இன்று திரையரங்கில் வெளியாகி…

கார்பரேட் நிறுவனத்திற்கு எதிராக போராடும் ஒரு சாமானியனின் வலியை எடுத்துரைக்கும் படம் தான் கலகத் தலைவன். இந்த திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

உதயநிதி நடிப்பில், மகிழ்திருமேனி இயக்கத்தில் இன்று திரையரங்கில் வெளியாகி இருக்கும் திரைப்படம் கலகத்தலைவன். உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இவர்களுடன் ஆரவ், கலையரசன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

வஜ்ரா என்னும் கார்ப்பரேட் நிறுவனம் கனரக வாகனமொன்றை சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவிக்கிறது. வாகனம் அறிமுகமாகும் இறுதி நேரத்தில், அந்த வாகனத்தில் குறை ஒன்று இருப்பது தெரியவர, அதை மறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கனரக வாகனத்தில் இருந்த குறைபாடு ஊடகங்கள் மூலமாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகிறது. இதனால் கோபடமடைந்த அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கம்பெனியின் ரகசியம் எப்படி வெளியானது என்பதை அறிய ஒருவரை நியமிக்கிறது. தகவல் எப்படி வெளியானது என்பதை கண்டுபிடிக்கப்பட்டதா? எதனால் அந்த ரகசியம் வெளியானது? என்பது தான் கலகத் தலைவன் படத்தின் கதை.

திரு என்னும் கதாப்பாத்திரத்தில் பொருளாதார நிபுணராக உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தில் நடித்துள்ளார். நெஞ்சுக்கு நீதி படத்திற்கு பிறகு கலகத் தலைவன் திரைப்படம் வெளியாகி உள்ளதால் இந்த படத்திற்கு பெரிய எதிர்ப்பு இருந்து வந்தது. அந்த எதிர்ப்பார்ப்பை ஓரளவுக்கு உதயநிதி பூர்த்தி செய்துள்ளார். அவரின் நடிப்பு படத்திற்கு படம் மெருகேறி வருகிறது. காதல் காட்சிகள், ஆக்ஷன் என தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ஆரவ் தான் படத்திற்கு பெரிய பலமாக உள்ளார். படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். முதல் முறையாக வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ஆரவ் அதற்காக மெனக்கெட்டு இருப்பது நன்றாக தெரிகிறது.

உதயநிதியின் காதலியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் தனக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். காதல் காட்சிகள், பாடல்கள் என தன்னால் முடிந்த அளவுக்கு படத்திற்கு வலு சேர்க்க முயற்சி செய்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஶ்ரீகாந்த் தேவா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்கள் ஓரளவுக்கு கவனத்தை பெற்றாலும் பின்னணி இசை சில இடங்களில் சரியாக அமையவில்லை.

இப்படம் பொருளாதாரத்தை பற்றி பேசுவதால் பொருளாதாரம் குறித்த நிறை குறைகளை பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் சரி செய்துள்ளார். அவரின் பங்கு இந்த படத்திற்கு பெரிய பலமாக உள்ளது. கதையை நகர்த்தி செல்ல அவரது பங்கு முக்கியமானதக உள்ளது.

தடம், தடையற தாக்க, மீகாமன் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து இயக்குனர் மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்கியுள்ளார். மகிழ் திருமேனியின் முந்தைய படங்களை போலவே, இந்த படத்திலும் தன்னுடைய பாணியை அவர் பின்பற்றி உள்ளார். கார்ப்பரேட் நிறுவனம் அரசின் நிறுவனத்தை வாங்கினால் எங்கோ ஒரு மூலையில் உள்ள குடும்பங்களையும், சிறு தொழில்களையும் எப்படி பாதிக்கும் என்பதை இந்த படத்தின் மூலம் விளக்க முயற்சி செய்துள்ளார். முதல் பாதி கார்ப்பரேட் நிறுவனங்களின் பின்னணி மற்றும் காதல் காட்சிகள் என சற்று மெதுவாக நகர்கிறது. இரண்டாம் பாதி ஆக்ஷன் காட்சிகள், திரில்லர் என சற்று வேகமாக நகர்கிறது.

கார்ப்பரேட் நிறுவனம், பொருளாதாரம், அதனால் சாதாரண மனிதன் எப்படி பாதிக்கப்படுகிறான் என்பதை பதிவு செய்ய முயற்சி செய்துள்ள இயக்குனரின் முயற்சி பாராட்டப்பட வேண்டியது. அதே நேரத்தில் திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம் என்று தோன்றுகிறது.

மொத்தத்தில் குடும்பத்துடன் திரையரங்கில் பார்க்க வேண்டிய திரைப்படமாக கலகத் தலைவன் உருவாகியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.