இந்த தருணத்தில், “தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்” என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நாளை அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில், ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடர்ந்து தங்களது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதிமுகவில் மொத்தம் 75 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். இதில் ஓ.பி.எஸ்க்கு 11 மாவட்ட செயலாளர்களும், இ.பி.எஸ்க்கு 64 மாவட்ட செயலாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஒபிஎஸ் ஒத்து போவது நல்லது என முன்னாள் அமைச்சர் சிவபதி கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை கிரின்வேஸ் சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த முன்னாள் அமைச்சரும், அம்மா பேரவைச் செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் இபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், “தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்” என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, “மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகளிர் அணியினர் அம்மா நினைவிடத்திற்கு சென்றபோது தேனாம்பேட்டை, வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவரும்,
தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக இணைச் செயலாளருமான திரு.கேசவன் அவர்கள் தீக்குளிக்க முயன்றதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கழகத் தொண்டர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த தருணத்தில், ‘தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்’ என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
ஓபிஎஸ்-இன் இந்த ட்வீட் இணையத்தில் பரவி வரும் நிலையில், மீண்டும் ஒரு தர்ம யுத்தத்தை ஓபிஎஸ் கையில் எடுக்கிறாரா என இணைய பயன்பாட்டாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.