அண்ணாவின் 54-வது நினைவு நாள்: முதலமைச்சர் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணி

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடம் நோக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதியாக பேரணி சென்று அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னாள்…

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடம் நோக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதியாக பேரணி சென்று அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 54ஆவது நினைவு தினம், இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் தொடங்கிய இப்பேரணி , அண்ணா நினைவிடம் வரை நடைபெற்றது. இந்த பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் , திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் பொன்முடி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா, திமுக எம்எல்ஏக்கள், மாவட்ட செயலர்கள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர். பேரணியின் முடிவில் மெரினாவில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர். இதற்காக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்ததோடு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இணையதள பக்கத்தில், களம் சென்று காணுகின்ற வெற்றிக்கு நம்மையெல்லாம் ஊக்குவிக்கும் தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா நீடுதுயில் கொண்ட நாள்! தம்பி என்று தமிழர்தமைத் தட்டியெழுப்பிய அண்ணனின் நினைவுகளைச் சுமந்து, தம்பிமார் படை அமைதிப் பேரணிச் சென்றோம். இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற அண்ணனின் முழக்கத்தை என்றும் மெய்ப்பிக்க உறுதியேற்போம்! தனயனாய் அவர் பெயரிட்ட தமிழ்நாட்டை மேதினியில் உயரக் கொண்டு செல்வோம் என பதிவிட்டு தமக்கு அண்ணா மீது இருந்த மரியாதையை வெளிப்படுத்தியிருந்தார்.

மேலும் பேரணிக்காக வாலாஜா சாலை முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது .

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.