சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், குஷ்பு உள்ளிட்டோர் நடித்து 1992 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அண்ணாமலை. சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடித்து 1997ம் ஆண்டு வெளியானது சூர்யவம்சம். வெவ்வேறு ஆண்டுகளில் ஒரே தேதியில் வெளியான இந்த இரண்டு திரைப்படத்திற்கும் இடையே ஓர் சிறப்பான ஒற்றுமை உள்ளது. ஆம், இத் திரைப்படங்களில் ஒரே பாடலில் ரஜினிகாந்த், சரத்குமார் இருவரும் மிகப்பெரிய தொழிலதிபர்களாக மாறிவிடுவர்.
அண்ணாமலை திரைப்படத்தில் சாதாரண பால் வியாபாரம் செய்யும் அண்ணாமலையான ரஜினிகாந்த், நண்பன் செய்த துரோகத்தால் அவரைவிட பணக்காரன் ஆவேன் என சபதமேற்று அதில் வெற்றியும் பெறுகிறார். பின்னர், தனது நண்பன் செய்த தவறை மறந்து அவரை ஏற்றுக்கொள்கிறார். இதுதான் கதை. இத்திரைப்படத்தில் வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம் என்ற ஒரே பாடலில் பால்கார அண்ணாமலை, பணக்கார அண்ணாமலையாக மாறுவார். திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்றது.
இதுபோலவே சூர்யவம்சம் திரைப்படத்தில் தந்தை சரத்குமாரால் புறக்கணிக்கப்படும் மகன் சரத்குமார், தேவயானியை திருமணம் செய்ததால் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்படுகிறார். திருமணத்திற்குப் பின் பழைய பேருந்தை வாங்கும் சரத்குமார், நட்சத்திர ஜன்னலில் என்ற ஒரே பாடலில் பல பேருந்துகளுக்கு உரிமையாளராகவும், பல நிறுவனங்களையும் தொடங்கி சாதிக்கிறார். 
தமிழ்நாட்டில் டெக், விசிடி அறிமுகமான காலத்தில் அண்ணாமலை, சூர்யவம்சம் கேசட்டுகள் தேயத் தேய பல நூறு முறை திரையிடப்பட்டவை. குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களின் பேவரிட் திரைப்படங்கள் வரிசையில் இடம்பெற்றவை. இந்த பாடல்களைப் பார்த்து தாங்களும் ஒரே பாடலில் முன்னேறிவிடலாம் என துடிக்கும் இளைஞர்கள் பட்டாளமும் இன்னமும் இருக்கத்தான செய்கிறார்கள்.
இந்த நிலையில் அண்ணாலை திரைப்படம் வந்து 30 ஆண்டுகள் ஆனதை #30YearsofAnnamalai என்ற ஹாஷ்டேக்கிலும், சூர்யவம்சம் திரைப்படத்தை #25yearsofSuryavamsam என்ற ஹாஷ்டேக்கிலும் பதிவிட்டு ரசிகர்கள் கருத்து பகிர்ந்துவருகின்றனர்.







