ரியல் எஸ்டேட் அதிபர்களுக்காக தமிழ்நாட்டில் ஆட்சி நடைபெற்று வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
சென்னை ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகரில் வீடுகள் இடிப்பதை கண்டித்து தீக்குளித்து உயிரிழந்த கண்ணையன் என்பவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த அண்ணாமலை பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, 1971ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது வெளியிடப்பட்ட அறிவிப்பை அடுத்தே, மக்கள் இங்கு வசித்து வந்ததாகக் கூறினார்.
எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் இவர்கள் வசித்து வந்த நிலையில், ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றுக்கு இந்த இடத்தை கொடுப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு தனிமனிதர் தனது சுயநலத்திற்காக திரும்பத் திரும்ப நீதிமன்றத்துக்குச் சென்று பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை துன்புறுத்தி வருவதாக அண்ணாமலை தெரிவித்தார்.
தனக்காக ஒரு வீடியோவை கண்ணையன் எடுத்து வைத்ததாகவும், அதனை அவரது குடும்பத்தினர் தன்னிடம் காட்டியதாகவும் கூறிய அண்ணாமலை, திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டு, இதுபோன்று கட்டடங்களை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
இது குறித்து ஆளுநரை சந்தித்து இடிக்கப்பட்ட கட்டடங்களை மீண்டும் கட்டித்தர நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சியை பாஜக எடுக்கும் என்று கூறிய அண்ணாமலை, பாஜக இந்த மக்களை ஒருபோதும் கைவிடாது என்றார்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்காக இருக்கக்கூடிய ஆட்சி இது என்றும், ஏழை மக்களுக்கான ஆட்சி அல்ல என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இது குறித்து நீதிபதி ஒருவர் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தி தவறு செய்த அதிகாரிகள் மீது துறை ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவாரூரில் தேர் ஓடும் தெற்கு வீதிக்கு ஆன்மிகத்தில் நம்பிக்கை இல்லாத கருணாநிதியின் பெயரை எதற்கு வைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய அண்ணாமலை, இதை கண்டிக்கும் நோக்கிலேயே திருவாரூரில் போராட்டம் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.








