சென்னையின் இதயப்பகுதி என்றழைக்கப்படகூடிய அண்ணா சாலையில் அமைந்துள்ள அண்ணா மேம்பாலம் பொன்விழா ஆண்டை கொண்டாடவுள்ளது. 50 ஆண்டுகள் ஆனாலும் கம்பீரமாக காட்சியளிக்கும் அண்ணா மேம்பாலத்தை நவீனமயமாக்கும் பணிகள் குறித்தும் அழகுபடுத்தும் பணிகள் குறித்தும் சற்று விரிவாக பார்க்கலாம்..
சென்னையின் அடையாளம்….
சென்னையில் கட்டப்பட்ட முதல் மேம்பாலம்….
ஆசியாவின் மிகப்பெரிய மேம்பாலம்…
இந்திய அளவில் மிக நீளமான மேம்பாலம்…. என பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகும் அளவிற்கு ஓங்கி உயர்ந்து நிற்கிறது அண்ணா மேம்பாலத்தின் வரலாறு.
பேரறிஞர் அண்ணா மறைவுக்கு பிறகு முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற கருணாநிதி இந்த மேம்பாலத்தை கட்டினார். 1973-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி திறந்து வைத்த அப்போதய முதலமைச்சர் கருணாநிதி, அண்ணா நினைவாக பாலத்திற்கு அண்ணா பெயரையே சூட்டி மகிழ்ந்தார். நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் அண்ணா மேம்பாலம் சென்னையின் அடையாளங்களில் பிரதானமாக திகழ்கிறது.
வரும் ஜூன் ஒன்றாம் தேதி அண்ணா மேம்பாலம் பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ள நிலையில், அதனை அழகுபடுத்தி புதுப்பிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நெடுஞ்சாலைத்துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு, சீரமைப்பு பணிகள் தீவிரமாக தொடங்கியுள்ளளன. அண்ணா மேம்பாலத்தின் கீழ் உள்ள 80 தூண்களும் GRC பேனல்களை பயன்படுத்தி மறுவடிவமைப்பு செய்து அழகுபடுத்தும் பணியில் புகழ்பெற்ற வடிவமைப்பு கலைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தனி கவனம் செலுத்தி அவ்வப்போது நேரில் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்துவதோடு அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்.
தமிழ் நாகரிகம், திராவிட அரசியலின் அடையாளங்கள் ஆகியவற்றை சிற்பங்களாகவும், ஓவியமாகவும் பிரதிபலிக்கும் வகையில் அழகிய வேலைப்பாடுகளும் மேம்பாலத்தின் பக்கவாட்டுகளில் அமைக்கப்பட உள்ளன. மேம்பாலத்தின் ஒவ்வொரு நுழைவு பகுதி, வெளியேறும் பகுதி என 8 இடங்களில் அழகிய தூண்கள் நிறுவப்பட உள்ளன.
பேரறிஞர் அண்ணா, கருணாநிதியின் பொன்மொழிகள், மேம்பாலத்தின் அருகே புல் தரைகளில் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் தமிழ் எழுத்துக்கள், தமிழகத்தின் வரலாற்றை பறைசாற்றும் வண்ணம் கலை வடிவத்துடன் கூடிய சிற்பங்களும் மேம்பாலம் அருகே வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, இன்றைக்கு சென்னையில் எத்தனையோ மேம்பாலங்கள் பிரமாண்டமாக கட்டப்பட்டு திறக்கப்பட்டாலும், சென்னையின் பாரம்பரிய அடையாளமாக அரை நூற்றாண்டில் அடியெடுத்து வைத்து கம்பீரமாக காட்சியளிக்கிறது பேரறிஞர் அண்ணா பெயரிலான மேம்பாலம்.
—-விக்னேஷ்







