ரவிக்குமார் எம்பிக்கு அப்பல்லோ மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை முடிந்து, அவசர சிகிச்சை பிரிவில் இருந்து அவர் சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ரவிக்குமார் எம்பி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், அன்பும் அக்கறையும் காட்டிய அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். அப்பல்லோ மருத்துவமனையில் டாக்டர் செங்கோட்டுவேலு தனக்கு ஆஞ்சியோ செய்து இரண்டு அடைப்புகள் இருப்பதைக் கண்டறிந்ததாக குறிப்பிட்டுள்ளார். பின்னர் அதில் ஸ்டெண்டுகள் பொருத்தி சிகிச்சையை வெற்றியாக்கியதாக தெரிவித்துள்ளார். தற்போது அவசர சிகிச்சைப் பிரிவு வார்டிலிருந்து எனது அறைக்கு மாற்றப்பட்டு இருப்பதாகவும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) டிஸ்சார்ஜ் செய்வதாகக் மருத்துவர்கள் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வேறொரு மருத்துவரிடம் ஆஞ்சியோ செய்து கொள்வதற்காகத்தான் பதிவு செய்திருந்தேன். நடிகர் சிவகுமார்தான், டாக்டர் செங்கோட்டுவேலுவிடம் போய் அவரது கருத்தைத் தெரிந்து கொண்ட பிறகு செய்துகொள்ளலாம் என்று சொன்னார்கள். அதன் அடிப்படையில் அவரைச் சந்தித்தேன். பின்னர் அவரிடமே சிகிச்சை எடுத்துக் கொள்வது என்று முடிவு செய்து மருத்துவரை மாற்றி புதன்கிழமை மாலை மருத்துவமனையில் சேர்ந்தேன் என ரவிக்குமார் எம்பி விளக்கமளித்துள்ளார்.
பின்னர் நேற்று முன்தினம் காலை எட்டு மணியிலிருந்து பகல் ஒரு மணிவரை எனக்கு சிகிச்சை தரப்பட்டது. வலதுபுறம் செல்லும் முதன்மையான ரத்தக்குழாயில் 100 சதவீத அடைப்பு இருந்தது. இது கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாகவே இருந்திருக்கும் என்று மருத்துவர் கூறியதாக அவர் தெரிவித்தார். அடைப்பு ஏற்பட்டு இருக்கும் இடத்தை அடையாளம் காண்பது மிகவும் சிரமமாக இருந்தது. எனவே இன்னொரு கையிலும் ஆஞ்சியோ செய்து இரண்டு புறமாக அதை ஆராய்ந்து அடைப்பு இருக்கும் இடத்தைக் கண்டறிந்தார்கள். ரத்தக் குழாய்கள் பிரியும் இடத்தில் அடைப்புகள் இருந்ததால் இரண்டு இடங்களில் ஸ்டெண்ட் போட வேண்டி இருந்தது. அது தவிர ஒரு இடத்தில் பலூன் வைத்திருக்கின்றனர். இவ்வளவு சிக்கலாக இந்த சிகிச்சை இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. மிகவும் சிரமப்பட்டு இந்த சிகிச்சையை அளித்த டாக்டர் செங்கோட்டுவேலு மற்றும் மருத்துவ குழுவில் இருந்த அனைவருக்கும் என்னுடைய நன்றி என கூறினார்.
உங்கள் அனைவருடைய நல்வாழ்த்துக்களால் தான் நலமாக இருக்கிறேன். என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய நண்பர்கள் தோழர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். விசிக தலைவர் திருமாவளவன் எம்பி அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து தன்னை வாழ்த்தியதாக ரவிக்குமார் தெரிவித்தார். இந்த சிகிச்சையை தான் எடுத்து கொள்ளவில்லை என்றால் சில நாட்கள் தாமதித்திருந்தாலும் உயிருக்கு ஆபத்தாகியிருக்கும். இது மறு பிறவி என ரவிக்குமார் தெரிவித்துள்ளார். தலைவரோடு இருந்து பணிசெய்வதற்காகத்தான் இந்த ‘மறுபிறவி’ எனக்குக் கிடைத்திருக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதை திருமாவளவன் மூலமாக அறிந்து கடந்த 8 ஆம் தேதி தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு விசாரித்தார். அப்போது ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளவிருக்கும் மருத்துவர் செங்கோட்டுவேலுவிடம் பேசி நல்ல முறையில் கவனிக்குமாறு கூறியிருந்தார். மேலும் இன்று தொலைபேசியில் அழைத்து பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு உடல் நலத்தில் அக்கறை செலுத்தும்படியும் அறிவுரை கூறினார் என தெரிவித்தார்.
இதனிடையே, வருகிற 15-ம் தேதி ரவிக்குமார் எம்பிக்கு 60-வது மணி விழா கொண்டாடப்படவுள்ளது. விசிக தலைவர் திருமாவளவன் எம்பி தலைமையில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் மேலும் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவிக்க உள்ளனர்.
– இரா.நம்பிராஜன்







