பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்முவுக்கு ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆதரவு தெரிவித்தார்.
ஏற்கனவே, ஒடிஸாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியும் முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து ஆந்திரப் பிரதேச மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில், “எஸ்சி, எஸ்டி, பிசி மற்றும் சிறுபான்மையினர் சமூகத்தினருக்கு ஜெகன் மோகன் ரெட்டி தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக இந்தச் சமூகத்தினரின் வளர்ச்சிக்கு ஜெகன் மோகன் ரெட்டி அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதால் குடியரசுத் தலைவர் தேர்தலில் இன்று நடைபெறவுள்ள வேட்பு மனு தாக்கலில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பங்கேற்கவில்லை. பதிலாக, மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் கட்சியின் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரிவு தலைவர்களான விஜய்சாய் ரெட்டி மற்றும் மக்களவை உறுப்பினர் மிதுன் ரெட்டி ஆகியோர் வேட்பு மனுத் தாக்கல் நிகழ்வில் பங்கேற்பார்கள் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
முன்னதாக, முர்மு டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா. பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளதால் திரெளபதி முர்முவின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகிவிட்டது என்றே சொல்லலாம். ஒடிஸா மாநிலத்தில் பழங்குடியின குடும்பத்தில் பிறந்தவர் தான் திரெளபதி முர்மு. ஒடிஸாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் வேட்பாளரும் முர்மு தான். ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற பெயரும் இவர் வசமே உள்ளது.
குடியரசுத் தலைவராக முர்மு தேர்வு செய்யப்பட்டால், இவர் நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மணிகண்டன்