ஆந்திரா : வாகன விபத்தில் சிக்கி 8 பக்தர்கள் உயிரிழப்பு – பிரதமர் மோடி இரங்கல்!

ஆந்திராவில் பக்தர்கள் சென்ற வாகனம் விபத்திற்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் இன்று அதிகாலை பக்தர்களை ஏற்றிச்சென்ற வாகனம் டேங்கர் லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்துள்ளனர். லோடு ஆட்டோவில் சுமார் 21 பேர் மந்த்ராலயம் ஸ்ரீராகவேந்திரா சுவாமி மடத்திற்கு சென்று கொண்டிருந்தபோது எதிர் திசையில் வந்த டேங்கர் லாரியுடன் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பெண்கள், 2 ஆண்கள், சிறுமி ஒருவர் என 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து அறிந்த பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பங்களுக்கு, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) தலா ரூ. 2 லட்சம் நிவாரண தொகையாக வழங்கப்படும், என்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.