கொந்தகையில் தண்ணீா்க் குழாய் பதிக்க வியாழக்கிழமை தோண்டப்பட்ட குழியிலிருந்து பழைமையான கலயங்கள், மனித எலும்புகள் கண்டறியப்பட்டன.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கப்பட்ட 9-ஆம் கட்ட அகழாய்வு கடந்த மாதம் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, அருகே உள்ள கொந்தகையிலும் அகழாய்வு நடத்தப்பட்டது.
அகழாய்வில் முதுமக்கள் தாழிகள், மனித எலும்புகள் உள்பட பண்டைய தமிழா்கள் பயன்படுத்திய ஏராளமான தொன்மையான பொருள்கள் கண்டறியப்பட்டன. இந்த அகழாய்வில் கண்டறியப்பட்டப் பொருள்களை ஆவணப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், கொந்தகையைச் சோ்ந்த சுரேஷ் என்பவா் தனது தோட்டத்தின் அருகே தண்ணீா்க் குழாய் பதிக்க குழி தோண்டினாா். அப்போது, குழியிலிருந்து பல வடிவங்களில் ஏராளமான மண் கலயங்கள், மனித எலும்புகள் கண்டறியப்பட்டன.
இது குறித்து கீழடியில் உள்ள தொல்லியல் துறையினருக்கு சுரேஷ் தகவல் தெரிவித்தாா். அவா்கள் நேரடியாக வந்து இந்த மண் கலயங்களை வாங்கிச் சென்றனர்.







