புதுச்சேரி போல குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் – அன்புமணி கோரிக்கை

புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை வரவேற்ற அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் இந்த திட்டத்தை காலம் கடத்தாமல் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.   பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்…

புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை வரவேற்ற அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் இந்த திட்டத்தை காலம் கடத்தாமல் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

 

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணிராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பதிவில், புதுச்சேரியில் 21 வயது முதல் 57 வயது வரையிலான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/draramadoss/status/1561652094532468738?s=20&t=8O7DHw4cXJt8t8p29DKX9A

 

தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ள அவர், 21 வயதுக்கும் மேற்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மட்டும்தான் உதவித்தொகை என அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் 21 வயதுக்கு முன்பு திருமணம் செய்வது குறையும் என சுட்டிக்காட்டியுள்ளார். அந்த வகையில் இது மகளிர் மற்றும் சமுதாய மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் புதிய அரசு பதவியேற்று இரு நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விட்ட நிலையில், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

 

குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்குவது மகளிர் உரிமைக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் என தெரிவித்துள்ள அவர், இந்த விவகாரத்தில் இனியும் தாமதம் செய்யாமல் மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.