செப்டம்பர் 19-ம் தேதி முதல் அதிவேக இணையவசதி கொண்ட வயர்லெஸ் ஜியோ ஏர் ஃபைபர் அறிமுகம் செய்யப்படும் என முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னனி தனியார் நிறுவனங்களில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் ஒன்று. பல்வேறு துறைகளில் கால்பதித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்நிறுவனத்தின் தலைவராக முகேஷ் அம்பானி பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் 46வது ஆண்டுப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி, கடந்த நிதியாண்டில் புதிதாக 2 லட்சத்து 60 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி ரிலையன்ஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : தொட்டதெல்லாம் பொன்னாக்கும் சோப்ராவும், அவர் பின் இருக்கும் விளையாட்டு அறிவியலும்!!
கடந்தாண்டு அக்டோபரில் தொடங்கிய ஜியோ 5ஜி சேவை பெருநகரங்களில் 96 சதவீதம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் டிசம்பருக்குள் ஜியோ 5ஜி சேவை விரிவுப்படுத்தப்படும் எனவும் கூறினார். ஒரு நபர் சராசரியாக மாதத்திற்கு 25 ஜி.பி. ஜியோ டேட்டாவை பயன்படுத்துவதாகவும் முகேஷ் அம்பானி குறிப்பிட்டார்.
இந்த பொதுக்கூட்டத்தில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் முகேஷ் அம்பானியின் மகள் இஷா, மகன்கள் ஆகாஷ், ஆனந்த் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் முகேஷ் அம்பானியின் மனைவியான நீடா அம்பானி இயக்குநர் பதவியில் இருந்து விலகுவதாகவும், நிரந்தர அழைப்பாளராக இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானி, அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவியில் நீடிப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு “JIO Air Fiber” எனும் புதிய திட்டத்தை செப்டம்பர் 19-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கேபிள்கள் இல்லாமல் காற்றின் வழியே அதிவேக இணைய சேவையை இதன் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயக் கழிவுகளை எரிவாயுவாக மாற்ற ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் 100 ஆலைகளை அமைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் 10 லட்சம் பெண் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்கான புதிய முன்னெடுப்பை, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து ரிலையன்ஸ் அறக்கட்டளை தொடங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.







