மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அவ்வப்போது எளிய மனிதர்களின் திறமைகளை, கண்டுபிடிப்புகளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பாராட்டுகளை தெரிவிப்பார். மேலும், அவர்களுக்கு உதவிகளையும் செய்து வருகிறார். தற்போது பாத்திரங்களை வைத்து அருமையாக தாள இசையை வாசிக்கும் இளைஞர் ஒருவரின் வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் ஸ்வீட் கார்ன் விற்பனையாளர் ஒருவர் தன் கைவசம் இருக்கும் கரண்டி மற்றும் பக்கத்தில் இருந்த பாத்திரங்களை கொண்டு தாளம் வாசித்து அசத்துகிறார். கார்னில் ருசிக்காக சில மசலாக்களை சேர்க்கும்போது அவர் தன் கை வசம் உள்ள கரண்டி மற்று பாத்திரங்களை கொண்டு தாளம் வாசித்தப்படி அந்த பணியை மேற்கொள்கிறார். இதை பகிர்ந்து அந்த விற்பனையாளரை ஆனந்த் மஹிந்திரா புகழ்ந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “இந்த ஜெண்டில்மேன் எங்கு வேலை செய்கிறார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் பெங்களூரில் நடைபெற உள்ள ‘மஹிந்திரா பெர்குஷன்’ விழாவில் அவர் கெளரவ விருந்தினராக பங்கேற்க வேண்டும் என நான் விரும்புகிறேன். தாளம் இந்தியாவின் இதயத்துடிப்பு என்பதற்கு வாழும் உதாரணமாக இந்த நபர் திகழ்கிறார்” என்று ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டுள்ளார்.
அண்மைச் செய்தி: போதைக்கு எதிராக 1 கோடி கையெழுத்து இயக்கம் – ஆதரவு தந்த கமல்ஹாசன்
ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டுள்ள இந்த வீடியோ 1 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.







