மாநிலங்களவையில் எம்.பிக்கள் மொபைல் போனில் அவை நடவடிக்கைகளைப் பதிவு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று அவைத்தலைவரும் , துணை குடியரசுத் தலைவருமான வெங்கைய்யா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.
மாநிலங்களவை கூட்டத்தொடர் இன்று காலை 9 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது பேசிய அவைத்தலைவர் வெங்கைய்யா நாயுடு, மாநிலங்களவையில் மொபைல் போன் உபயோகிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார். சில உறுப்பினர்கள் மொபைல் போனை பயன்படுத்தி அவை நடவடிக்கைகளைப் பதிவு செய்வது கவனத்துக்கு வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு எதிரானது என்றும் வெங்கைய்யா நாயுடு கூறினார். இது போன்ற செயல்களில் உறுப்பினர்கள் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்த அவர், அதிகாரப்பூர்வமற்ற வகையில் அவை நடவடிக்கைகளை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வது அவை உரிமையை மீறிய செயல் என்றும் கண்டித்தார். அத்தகைய செயலில் ஈடுபடுவோர் அவையின் கண்டனத்துக்கு உள்ளாக்கூடும் என்றும் வெங்கைய்யா நாயுடு எச்சரித்தார்.