புதுச்சேரியில் ஏப்ரல் 6ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறக்கூடிய நிலையில் தற்போது காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதி அமமுக வேட்பாளர் தர்பாரண்யம் பாஜகவில் இணைந்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுவையில் எதிர் வரும் சட்டப்பேரவை தேர்தலையொட்டி தேர்தல் பரப்புரையை பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிரமாக்கியுள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகளில் திடீர் மாற்றங்கள் மேலெழத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக புதுவை யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் மாவட்ட திருநள்ளாறு தொகுதி அமமுக வேட்பாளர் தர்பாண்யம் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் பாஜகவில் இன்று இணைந்துள்ளார்.

காலையில் அமமுக பரப்புரையில் ஈடுபட்டு மாலையில் பாஜகவில் தர்பாரண்யம் இணைந்துள்ளதால் அமமுக தொண்டர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
முன்னதாக இன்று மாலை திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.சம்பத் பாஜகவில் இணைந்தார். அவருடன் அவரது மகன் இளையபாரதியும் பாஜகவில் இணைந்தார். திமுகவில் சுயமரியாதை இல்லாததால் தன்மானத்தை காப்பாற்றிக்கொள்ள பாஜகவில் இணைந்துள்ளதாக ஏ.ஜி.சம்பத் தெரிவித்திருந்தார்.
சட்டப்பேரவை தேர்தலையொட்டி பல அரசியல் கட்சியினர் சிலர் வெவ்வேறு கட்சிகளுக்கு மாறி வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.







