அம்மா உணவகத்திற்கு குப்பை வண்டியில் வந்த அரிசி மூட்டைகள் – அதிர்ச்சியில் பொதுமக்கள்!

திருச்சி மாவட்டம், துறையூர் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்திற்கு, குப்பை வண்டியில் அரிசி மூட்டைகளை கொண்டு வந்து இறக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம், துறையூர் பேருந்து…

திருச்சி மாவட்டம், துறையூர் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும்
அம்மா உணவகத்திற்கு, குப்பை வண்டியில் அரிசி மூட்டைகளை கொண்டு
வந்து இறக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம், துறையூர் பேருந்து நிலையத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு
வருகிறது. இந்த உணவகத்திற்கு அரிசி மற்றும் பருப்பு போன்ற பொருட்கள், பொதுவாக
லாரி அல்லது நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வேறு வேன்களில் கொண்டு
வந்து இறக்கப்படும். ஆனால், நேற்று நகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்
கீழ், வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கும் வண்டியில் அரிசி மூட்டைகளை போட்டு,
தூய்மை பணியாளர்கள் நேரடியாக வந்து அரிசி மூட்டைகளை இறக்கினர்.

இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனைக் கண்ட இளைஞர்கள்
வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கினர். இது குறித்து
துறையூர் நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, அம்மா உணவகத்திற்கு இது போன்ற
வண்டிகளில் அரிசி மூட்டைகளை கொண்டு வருவதில்லை. திடக்கழிவு மேலாண்மை
திட்டத்தின் கீழ் பெறப்பட்ட குப்பை வண்டி என்றாலும், இதுவரை அந்த வண்டியில்
குப்பைகளை நாங்கள் ஏற்றியதில்லை என்றனர்.

மேலும், இந்த நிகழ்வு வழக்கத்திற்கு மாறாக நடந்து விட்டது எனவும், குப்பை ஏற்றிய
வண்டியில் அரிசியை ஏற்றி இறக்கவில்லை எனவும் விளக்கம் அளித்தனர்.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தரப்பட்ட குப்பை வண்டியில், அரிசியை
எப்படி ஏற்றினீர்கள் என்ற கேள்விக்கு நிர்வாகம் தரப்பில் உரிய பதில் இல்லை.

கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.