புதிய கல்விக் கொள்கை அனைவராலும் வரவேற்கப்படுகிறது என்றும் அதனை யாரும் எதிர்க்கவில்லை என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறை சார்பில் நடைபெற்று வரும் 3 நாள் கருத்தரங்கின் தொடக்கவிழாவில் அமித் ஷா உரையாற்றினார். அப்போது, இந்தியா ஏராளமான பிரச்னைகளைக் கொண்ட நாடு என்று சிலர் கூறுவதாகக் குறிப்பிட்டார். உண்மையில், லட்சக்கணக்கான பிரச்னைகளுக்குத் தீர்வு தரும் ஆற்றலைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது என தாங்கள் நம்புவதாக அவர் கூறினார்.
நரேந்திர மோடி பிரதமரான 2014ம் ஆண்டு முதல் இதுவரை பல்வேறு சாதனைகளை இந்தியா கண்டுள்ளது என்றும், தாங்களும் இந்த நாட்டின் ஓர் அங்கம்தான் என்ற உணர்வை கோடிக்கணக்கான ஏழைகள் பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் அரசியல் சாசனப் பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை பிரதமர் மோடி கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி நீக்கியதை சுட்டிக்காட்டிய அமித் ஷா, அந்த நடவடிக்கையைத் தொடர்ந்து ரத்தக்களரி ஏற்படும் என்று மிரட்டியவர்களால் கல்வீச்சில் கூட ஈடுபட முடியவில்லை என்றார்.
தேசத்துக்கே முன்னுரிமை என்று செயல்பட்டால் மாற்றம் எவ்வாறு நிகழும் என்பதை பிரதமர் மோடி காட்டியுள்ளதாகவும் அமித் ஷா கூறினார்.
பல்கலைக்கழக மாணவர்கள் சித்தாந்தங்கள் மீதான விவாதங்களில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர மோதலில் அல்ல என குறிப்பிட்ட அமித் ஷா, ஒரு சித்தாந்தம் மோதலுக்குக் காரணமாக இருக்குமானால் அது சித்தாந்தமே அல்ல என்றார். நிச்சயமாக அது இந்தியாவின் சித்தாந்தமாக இருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கை அனைவராலும் வரவேற்கப்படுவதாகவும், யாரும் அதனை எதிர்க்கவில்லை என்றும் அமித் ஷா கூறினார்.
தாய்மொழி வழிக்கல்விதான் சிறந்தது என தெரிவித்த அமித் ஷா, அதன் காரணமாகவே புதிய கல்விக் கொள்கையில் 5ம் வகுப்பு வரை தாய்மொழி வழி அல்லது பிராந்திய மொழி வழி கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.










