திரௌபதி முர்முவை சந்தித்த அமித்ஷா! நாளை INDIA – கூட்டணியினர் சந்திக்க உள்ள நிலையில் நடைபெற்ற சந்திப்பு!!

குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவை INDIA கூட்டணியினர் நாளை சந்திக்க உள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் நாளை குடியரசுத்தலைவரை…

குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவை INDIA கூட்டணியினர் நாளை சந்திக்க உள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் நாளை குடியரசுத்தலைவரை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். இந்த சந்திப்பின் போது மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் குடியரசுத்தலைவரிடம் மனு அளிக்க உள்ளன. மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறாதது குறித்து முறையிடவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

முன்னதாக மணிப்பூருக்கு, INDIA கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் எம்பிக்கள் நேரடியாகவே சென்று அங்கு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து உண்மை நிலவரம் குறித்து கேட்டறிந்தனர்.

பின்னர் குடியரசுத்தலைவரை சந்தித்து மனு அளிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. அதன்படி நாளை சந்திக்க திட்டமிட்டு இருக்கும் நிலையில், இன்று அமித்ஷா குடியரசுத்தலைவரை சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. குடியரசுத்தலைவர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மரியாதை நிமித்தமாக குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவை உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து பேசியதாக குடியரசு தலைவர் மாளிகையின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.