அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ம் தேதி சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வடக்கில் உதித்த சமத்துவ சூரியன் அண்ணல் அம்பேத்கர் என்றும், சமூகம் ஏற்படுத்திய ஏற்றத்தாழ்வை கல்வி, சட்டம், அரசியல் எழுச்சி மூலம் சமப்படுத்திய போராளி அம்பேத்கர் என்றும், சாதிக் கொடுமையால் இருண்ட உலகத்தை தனது பரந்த அறிவால் விடிய வைத்தவர் அம்பேத்கர் என்றும் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அம்பேத்கர், வேண்டாததை நீக்கிய சிற்பி, வேண்டியதை சேர்த்த ஓவியர் என்று கூறிய முதலமைச்சர், அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ம் தேதி இனி சமத்துவ நாளாக கடைபிடிக்கப்படும் என்றும், அந்நாளில் தமிழ்நாடு முழுவதும் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்.
அம்பேத்கர் மணிமண்டபத்தில், அவரது முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்படும் என்றும், அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள், செம்பதிப்பாக தமிழில் மொழி பெயர்க்கப்படும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பை அதிமுக, பாஜக உள்ளிட்ட சர்வ கட்சிகளும் வரவேற்றன.