“அற்புதமான படைப்பு”… ‘பைசன்’ படக்குழுவினருக்கு அண்ணாமலை பாராட்டு!

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ‘பைசன்’ படத்தை பாராட்டியுள்ளார். 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் தீபாவளியை ஒட்டி அக்.17ம் தேதி வெளியான ‘பைசன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இப்படத்தை பாராட்டியுள்ளார். இதுகுறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
“மாரி செல்வராஜ் இயக்கியுள்ள, பைசன் – காளமாடன் திரைப்படத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு அற்புதமான, உணர்வுப் பூர்வமான திரைப்படத்தைத் தந்திருக்கிறார். அவருக்கும், படக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு கிராமத்து இளைஞன், தனது லட்சியத்தை அடைய எதிர்கொள்ளும் பிரச்னைகள், சந்திக்கும் சவால்கள், சமூகம் சார்ந்த சிக்கல்கள் என, அனைத்தையும் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார் மாரி செல்வராஜ்.
திரைப்படத்தின் பல காட்சிகளில், உணர்வுப் பூர்வமாக என்னைப் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிந்தது. அர்ஜுனா விருது வென்ற இந்தியக் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை, மிக அற்புதமாக திரையில் தந்திருக்கிறார் மாரி செல்வராஜ். அவரது சாதனை அத்தனை எளிதாகக் கிடைத்து விடவில்லை. சாதிக்க விரும்பும் இளைஞனுக்கு, சமூகம் பல வழிகளில் வேலியிட்டாலும், அந்த வேலியின் உயரத்தைத் தாண்டி வளர வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டான நம் மண்ணைச் சேர்ந்த நாயகன் மணத்தி கணேசனின் வரலாற்றை, மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
மேலும், சமூக ஒற்றுமை வேண்டும் என்ற தனது ஆழ்ந்த விருப்பத்தையும், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வெளிப்படுத்தியிருக்கிறார். கதாநாயகன்  துருவ், இந்தத் திரைப்படத்துக்காக தன்னையே அர்ப்பணித்திருப்பதை உணர முடிகிறது. பசுபதி, லால் ஆகியோரின் நடிப்புத் திறனைக் குறித்து நான் புதியதாக எதுவும் சொல்லத் தேவையில்லை. அனைத்து நடிகர்களுமே தங்கள் அற்புதமான திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள். மாரி செல்வராஜ், மேலும் பலப்பல அற்புதமான திரைப்படங்களைத் தர வேண்டும், மக்களை ஒன்றிணைக்கவும், ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமையவும், சமூகம் சார்ந்த அவரது பயணம் சிறப்பாகத் தொடர வேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கிறேன்”
இவ்வாறு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.