செந்தில் பாலாஜி கைதின் போது மனித உரிமை மீறப்பட்டதாக எழுந்த புகார்; பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவு!

செந்தில் பாலாஜி கைதின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக அவரது மனைவி மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்த நிலையில், இந்த விவகாரம் குறித்து 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அமலாகத்துறை…

செந்தில் பாலாஜி கைதின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக அவரது மனைவி மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்த நிலையில், இந்த விவகாரம் குறித்து 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அமலாகத்துறை இணை இயக்குனருக்கு உத்தரவு.

சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த 14-ஆம் தேதி கைது செய்தது. அப்போது அவரிடம் 18 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றதாக கூறப்பட்டது. இந்நிலையில், அவர் நெஞ்சு வலிப்பதாக கூறியதால் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நள்ளிரவில் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்ததால், ஜூன் 28 வரை ரிமாண்ட்செய்யப்பட்டு நீதிமன்றத்தில் காவலில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்.

இந்நிலையில் அவரது மனைவி  மேகலா உயர்நீதிமன்றத்தில் முறையிட்டதை அடுத்து, செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதோடு அவரை மருத்துவமனையிலேயே வைத்து அமலாக்கத்துறை 8 நாட்கள் விசாரிக்க  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அனுமதி அளித்தார்.

இதனை அடுத்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு அவருக்கு நாளை அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.

இதற்கிடையில், செந்தில் பாலாஜியின் கைதின் போது மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக அவரது மனைவி மேகலா மனித உரிமை ஆணையத்தின் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மனித உரிமை ஆணையம், 6 வாரங்களில் அமலாக்கத்துறை இணை இயக்குனர் அறிக்கை அளிக்க வேண்டும் என  உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.