வாக்குப்பதிவின் போது பிரதமரின் ரோடுஷோ; தேர்தல் ஆணையம் விளக்கம்

குஜராத்தில் 2ம் கட்ட தேர்தலில் வாக்களிக்க சென்ற பிரதமர் ரோடுஷோ நடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. 189 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. நேற்று…

குஜராத்தில் 2ம் கட்ட தேர்தலில் வாக்களிக்க சென்ற பிரதமர் ரோடுஷோ நடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

189 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. நேற்று நடந்த 2ம் கட்ட தேர்தலின் போது பிரதமர் மோடி அகமதாபாத்திலுள்ள ராணிப் வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கினை பதிவு செய்தார். பிரதமரை பார்க்க அங்கு ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.

இந்நிலையில் தேர்தலில் வாக்களிக்கும் முன் பிரதமர் மோடி ரோடுஷோ நடத்தினார் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. இதேபோல் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறுகையில், வாக்களிக்கும் நாளில் ரோடுஷோ நடத்த கூடாது. ஆனால் பிரதமர் மோடி எதையும் செய்யலாம். அவர்கள் மன்னிக்கப்படுவார்கள் என்று விமர்சித்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. இதுகுறித்து குஜராத் மாநில தேர்தல் அதிகாரி கூறுகையில், பிரதமர் வாக்குச்சாவடிக்கு வெளியே ரோடுஷோ நடத்தியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியதையடுத்து அகமதாபாத்தில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்டோம். அந்த அறிக்கையின்படி, அது ஒரு ரோடுஷோ கூட்டமோ, அல்லது தனியாக எந்தவித கூட்டமோ கூட்டப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத் நகரின் ராணிப் பகுதியில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி வாக்களித்தார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாக, வாக்காளர்கள் அதிக அளவில் வருமாறு கேட்டுக் கொண்ட பிரதமர், தானும் வாக்களிக்கப் போவதாகத் தெரிவித்தார்.

“குஜராத் தேர்தலின் 2-வது கட்டத்தில் வாக்களிக்கும் அனைவரையும், குறிப்பாக இளம் வாக்காளர்கள் மற்றும் பெண் வாக்காளர்களை அதிக அளவில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் காலை 9 மணிக்கு அகமதாபாத்தில் வாக்களிப்பேன்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

இதுகுறித்து குஜராத் பாஜக தலைவர் சி.ஆர். பாட்டீல் கூறுகையில், “பிரதமர் மோடி எந்த ரோட்ஷோவும் செய்யவில்லை. அவர் எந்த விதியையும் மீறவில்லை. அவர் காரில் இருந்து வாக்குப்பதிவு மையத்திற்கு நடந்து சென்றார். இதை ஒரு ரோட்ஷோ என்று பெயரிடுபவர்கள் தங்கள் ஏமாற்றத்தை தெளிவாகக் காட்டுகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.