அகில இந்திய மகளிர் டென்னிஸ் சாம்பியன் போட்டியில் ஹரியானவை சேர்ந்த அஞ்சலி ரதி பட்டம் வென்றார்.
தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் நடத்திய அகில இந்திய அளவிலான டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள SDAT டென்னிஸ் மைதானத்தில் கடந்த மாதம் 29ம் துவங்கி, தொடர்ந்து எட்டு நாட்களாக நடைபெற்று வந்தது.
இந்த தொடரில் தமிழ்நாடு, கர்நாடக, மேற்கு வங்காளம், ஹரியானா என மொத்தம் 321 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர். மகளிர் ஒற்றையர் வீல் சேர், ஆடவர் ஒற்றையர் வீல் சேர், மற்றும் மகளிர் ஒற்றையர் ஆகிய பிரிவுகளின் இறுதி போட்டிகள் நடைபெற்றன.
மகளிர் ஒற்றையர் வீல் சேர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் கர்நாடகாவைச் சேர்ந்த கே.பி.ஷில்பா மற்றும் பாத்திமா ராவ் மோதினர். இதில் 6-1, 4-6, 10-7 என்ற செட் கணக்கில் கே.பி.ஷில்பா வெற்றி பெற்று முதலிடம் பிடித்தார். தோல்வியடைந்த பாத்திமா ராவ் இரண்டாம் இடம் பிடித்தார்.
ஆடவர் ஒற்றையர் வீல் சேர் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த கார்த்திக் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த சேகர் வீராசாமி மோதினர். இதில் சேகர் வீராசாமி 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் கர்நாடகாவை சேர்ந்த சாய் ஜான்வி மற்றும் ஹரியானவை சேர்ந்த அஞ்சலி ரதி மோதினர். இதில் அஞ்சலி ரதி 6-4,4-6,7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தார். சாய் ஜான்வி இரண்டாம் இடம் பிடித்தார்.
இறுதியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு இண்டியம் சாப்ட்வேர் கம்பெனி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் மெளான் இயக்குநர் ஆகியோர் பரிசு தொகையும் கோப்பைகளும் வழங்கினர்.







