தமிழகத்தில் யானைகள் இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும், சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கொடைக்கானலை சேர்ந்த மனோஜ் இமானுவேல் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வனவிலங்கு குற்றத்தடுப்பு சிறப்புப் பிரிவின் தரப்பில், தாக்கல் செய்த அறிக்கையில், யானைகள் உயிரிழப்பு சம்பவங்களில், சர்வதேச அளவிலான மாபியா கும்பல் ஈடுபட்டு இருக்கக்கூடும், என குறிப்பிடப்பட்டிருந்தது.
யானைகள் மரணம் தொடர்பாக, கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் யானைகள் மரணத்தில் வெளி மாநிலத்தவர்களுக்கு உள்ள தொடர்பு குறித்து, விசாரணை நடத்த வேண்டி இருப்பதால், சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை 3 மாதத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.







