நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (85) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். கடந்த சில நாட்களாகவே வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அஜித்தின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், நடிகரும் நண்பருமான அஜித்குமார் அவர்களுடைய அன்பு தாயார் மோகினி மணி அம்மையார் அவர்கள் மறைந்த செய்திக் கேட்டு வருத்தமுற்றேன்.
அஜித் அவர்கள், வாழ்வில் பல்வேறு உயரங்களைத் தொட உறுதுணையாக இருந்தவர் அவருடைய தாயார்.
அவரை இழந்து வாடும் நண்பர் அஜித் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




