பிரான்ஸில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் விதவிதமான ஆடைகளுடன் ஐஸ்வர்யாராய் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா-2022 பிரான்ஸ் நாட்டின் கான் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 1946ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த நிகழ்வு ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறுகிறது. திரையுலகினர் மத்தியில் பெரும் கவுரவமாக பார்க்கப்படும் இந்த விழா 11 நாள் தொடர்ந்து நடைபெறும்.
உலகின் பல்வேறு மொழி திரைப்படங்கள், ஆவணப்படங்கள் திரையிடப்படும் இந்நிகழ்வில் இந்தியா சார்பில் ரஞ்சித், கமல்ஹாசன், ஏ.ஆர். ரஹ்மான், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். இந்த ஆண்டிற்கான நடுவர்களில் ஒருவராக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கலந்து கொள்வது கூடுதல் சிறப்பாகும்.
கமல் நடிப்பில் வெளியாக உள்ள விக்ரம் திரைப்படத்தின் ட்ரைலர், மாதவன் நடித்து இயக்கியுள்ள ‘ராக்கெட்ரி – நம்பி விளைவு படம் ஆகியவை திரையிடப்பட்டது. இது தவிர ரஞ்சித்தின் வேட்டுவம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.
https://twitter.com/Variety/status/1526971452473454594
கேன்ஸ் விழாவின் முக்கிய நிகழ்வான சிவப்பு கம்பள வரவேற்பு சிறப்பாக நடைபெற்றது. துவக்க விழாவில் மாதவன், பா.ரஞ்சித், கமல்ஹாசன், நவாசுதீன் சித்திக் ஆகியோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் கேன்ஸ் திரைப்பட விழாவில் தவறாமல் கலந்து கொள்ளும் ஐஸ்வர்யா ராய் தனது வித்தியாசமான உடையலங்காரத்தால் பார்வையாளர்களைத் தன் வசப்படுத்துவார். இரண்டாம் நாளில் கருப்பு நிறத்திலான பூ அலங்காரங்களுடன் கூடிய உடையில் வந்து அசத்திய ஐஸ்வர்யா, மூன்றாம் நாளில் தனது வித்தியாசமான உடையின் மூலம் மொத்த கேன்ஸ் திரைப்பட நிகழ்வையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
பிரபல ஆடை வடிவமைப்பாளர் கவுரவ் குப்தாவின் ஆஸ்தான ஆடை வடிவமைப்பில் தோன்றி அசத்தினார் ஐஸ்வர்யா. இவரைத்தவிர இந்திய பிரபலங்களான தீபிகா படுகோன், பூஜா ஹெக்டே, தமன்னா ஆகியோரும் சிவப்பு கம்பள வரவேற்பில் கலந்து கொண்டனர்.







