ஆளுநருடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்திப்பு – செந்தில்பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்க கோரி மனு!

மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கக்கோரி அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.  அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான முந்தைய…

மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கக்கோரி அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். 

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான முந்தைய அதிமுக ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் போக்குவரத்து துறை முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத்துறை அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர் வலியால் கதறி அழுததை அடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை  நிறைவடைந்ததையடுத்து அவருக்கு இதயத்தின் மூன்று முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் உடனே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சுயநினைவுடன் உள்ளார் எனவும், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவுகளும், மருந்து மாத்திரைகளும் எடுத்துக்கொண்டார் எனவும், அவருக்கு கட்டாயமாக விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளதாகவும் ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.

விசாரணை கைதியாக நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படும் பதிவேட்டு எண் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது அவர் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டை சுற்றிலும் ஏராளமான ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும், விசாரணைக் கைதியாக உள்ள செந்தில் பாலாஜிக்கு சிறை கைதிக்கு உள்ள விதிமுறைகள் பின்பற்றப்படும் என்பதால், அவரை பார்வையாளர்கள் பார்க்க அனுமதி இல்லை. இருப்பினும், அவ்வாறு அவரை பார்க்க வேண்டும் என்றால், சிறைத் துறை அதிகாரிகளின் ஒப்புதல் பெற்ற பின்புதான் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.

அமைச்சர் செந்தில் பாலாஜி மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆகிய துறைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்து வருகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இரு அமைச்சர்களுக்கு அவர் கவனித்து வரும் துறைகளை அளிப்பது குறித்து அறிவாலயத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக நேற்றே நியூஸ் 7 தமிழ் தெரிவித்தது.

இந்தநிலையில், வீட்டு வசதித் துறையை கவனிக்கும் அமைச்சர் முத்துசாமியிடம் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையை கூடுதலாக ஒப்படைக்கவும், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வசம் மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு ஆகிய துறைகள் ஒப்படைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கோப்பு ஆளுநருக்கு அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்த அதிமுக நிர்வாகிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கக் கோரி மனு அளித்தனர். முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், செந்தில் பாலாஜியை மாநில அரசு பாதுகாப்பது முற்றிலும் தவறான செயல் என குற்றம் சாட்டினார்.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பது சட்டப்படி குற்றம், அவரை அமைச்சரவையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீக்கியிருக்க வேண்டும் எனவும் கூறினார். லட்சகணக்கான இளைஞர்களிடம் கோடி கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றிய செந்தில் பாலாஜியை, முதலமைச்சர் பாதுகாப்பதாகவும் குற்றம் சாட்டினார். தனது சகோதரி கனிமொழி சிறையில் இருந்த போது கூட பதறாத முதல்வர் மு.க.ஸ்டாலின், தற்போது செந்தில் பாலாஜிக்காக அதிகமாக பதறுவதாக சி.வி.சண்முகம் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை தீவிரமாக விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.