மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவிற்கு விளம்பரப்படுத்தக்கூடிய பேனர், கட்அவுட் போன்றவற்றை வைக்க கூடாது என நடிகர் விஜய் மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அரசியலுக்கு வருகிறேன் என்று நடிகர் விஜய் வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும், திரைப்படங்களிலும் திரைப்பட விழாக்களிலும் அவர் பேசும் வசனங்கள் அரசியல் வருகையை சொல்வதாக ரசிகர்கள் நம்புகிறார்கள். தேர்தல் களத்தில் உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வென்று விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, 10 மற்றும் 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி, மாணவிகள் 1,500 பேரை விஜய் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. மாவட்ட, தொகுதி வாரியாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஜூன் 17 சனிக்கிழமை அன்று தொகுதி தோறும் முதல் மூன்று இடங்களை பிடித்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவிற்கு விளம்பரப்படுத்தக்கூடிய பேனர், கட்அவுட் போன்றவற்றை வைக்க கூடாது என நடிகர் விஜய் மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். நடிகர் விஜயின் உத்தரவால் இயக்க நிர்வாகிகள் நீலாங்கரை பகுதிகளில் உள்ள சுவர்களில் வரையக் கூடிய விளம்பரங்களை செய்து வருகின்றனர்.







