ஆண்டுதோறும் சொத்து வரி மற்றும் குடிநீர் வரியை உயர்த்தும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்ட பேரவையில் பேசிய அதிமுக, ஏற்கனவே விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சட்ட திருத்தத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சட்டப்பேரவையில் இன்று மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் 1978-ம் ஆண்டு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் சட்டத்திருத்த மசோதாவு நிறைவேற்றப்படும் போது எழுந்து பேசிய அதிமுக எம்.எல்.ஏ., எஸ்.பி.வேலுமணி, அரசு கொண்டு வந்த இந்த சட்டத்திருத்தத்தில் உள்ள பகுதி-3 பிரிவு 81-b-ல் சொத்து வரியை உயர்த்துதல் என்ற தலைப்பில் மன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் மூலம் அவ்வப்போது அரசால் அறிவிக்கை செய்யப்படும் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வீதங்களுக்குள் சொத்து வரியை உயர்த்தலாம் என்ற உட்பிரிவு புகுத்தப் பட்டுள்ளது என்றார்.
ஏற்கனவே சொத்து வரி உயர்வை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் மீண்டும் ஆண்டுதோறும் சொத்து வரி மற்றும் குடிநீர் வரியை உயர்த்த வழிவகை செய்யும் இந்த சட்டம் தற்போது தேவையற்றது.
தமிழ்நாட்டில் அனைத்து பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளதால் ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்கள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆண்டுதோறும் சொத்து வரி மற்றும் குடிநீர் வரி உயர்வினை நிர்ணயம் செய்வதற்கான அதிகாரத்தை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்றங்களுக்கு வழங்குவது மேலும் மக்களை சிரமத்துக்குள்ளாக்கும் என்றும் தெரிவித்தார்.
எனவே அதிமுக சார்பில் இந்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.