“சசிகலா விவகாரத்தில் அதிமுகவில் சர்ச்சை கிடையாது” – முன்னாள் அமைச்சர்

சசிகலா விவகாரத்தில் அதிமுகவில் சர்ச்சை கிடையாது என முன்னாள் அமைச்சர் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கதேவர் சிலைக்கு மரியாதை செலுத்த சனிக்கிழமை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி…

சசிகலா விவகாரத்தில் அதிமுகவில் சர்ச்சை கிடையாது என முன்னாள் அமைச்சர் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கதேவர் சிலைக்கு மரியாதை செலுத்த சனிக்கிழமை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் வருகை தர உள்ள நிலையில் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க கோரி ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மனு அளித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “சசிகலா விவகாரத்தில் அதிமுகவில் சர்ச்சையே கிடையாது பழுத்த மரத்தில்தான் கல்லடி படும். சசிகலா குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் கருத்து சொன்ன பிறகு, இணை ஒருங்கிணைப்பாளர் கருத்து சொல்லவில்லை.

அனைவரும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்ற கருத்தைதான் ஒருங்கிணைப்பாளர் சொன்னார். அதில் என்ன தவறு இருக்கிறது. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அவர் சொன்னதில் தவறு எதுவும் இல்லை.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை செய்வோம் என்றுதான் ஓ.பி.எஸ். சொன்னார். அது தவறாக புரிந்து கொள்ளப்பட்ட காரணத்தால், பிற நிர்வாகிகளும் அதற்கு எதிர் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த கருத்துக்களை இப்போது சர்ச்சையாக மாற்ற விரும்பவில்லை.” என்று செல்லூர் ராஜு பேட்டியளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.