இன்று மாலை வெளியாகும் அதிமுக தேர்தல் அறிக்கையில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, மக்கள் பாராட்டும் வகையில், கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பிற கட்சிகள் முதலில் தேர்தல் அறிக்கையை கொடுத்துவிட்டு, வெற்றி பெற்றால்தான் அதனை நிறைவேற்றுவார்கள். ஆனால், அதிமுக அரசு ஆட்சியில் இருக்கும் போதே மக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி உள்ளதாக அவர் கூறினார். மேலும், வன்னியர்களின் 40 ஆண்டு கால கனவை நனவாக்கும் வகையில் 10.5 % இட ஒதுக்கீட்டை அறிவித்த அரசு அதிமுக அரசு தான் என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் புதுச்சேரியில் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை பாரதிய ஜனதா மற்றும் என்ஆர் காங்கிரசுடன் சுமூகமான முறையில் நடைபெற்று வருகிறது. விரைவில் அதிமுக போட்டியிடும் தொகுதிகள் குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், இன்று மாலை வெளியாகும் அதிமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய அறிவிப்புக்கள் இடம்பெறும் என்று தெரிவித்தார்.







