வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி திமுகவுக்கு எதிராக போராட்டம்: அதிமுக அறிவிப்பு

திமுக வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வீடுகளின் முன்பு நின்று முழக்கமிட்டு போராட்டம் நடத்தப்படும் என அதிமுக அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும், வரும் 28-ஆம் தேதி உரிமைக் குரல் எழுப்பும் போராட்டம் நடைபெறும் என…

திமுக வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வீடுகளின் முன்பு நின்று முழக்கமிட்டு போராட்டம் நடத்தப்படும் என அதிமுக அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும், வரும் 28-ஆம் தேதி உரிமைக் குரல் எழுப்பும் போராட்டம் நடைபெறும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவித்துள்ளனர்.

நீட் தேர்வு ரத்து தொடர்பான வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும், வாக்குறுதி அளித்தபடி, பெட்ரோல், டீசல் விலையில் மானியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் உரிமைக் குரல் எழுப்பும் போராட்டம் நடைபெறும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

விலைவாசி உயர்வு மற்றும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், மழையில் நனைந்து நெல் வீணாவதை தடுக்க, நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் குரல் எழுப்ப வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க நடவடிக்கை வேண்டும், பெண்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் போராட்டம் நடைபெறும் என ஓபிஎஸ் – இபிஎஸ் அறிவித்துள்ளனர்

வரும் 28 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும், தங்களது வீடுகளின் முன்பு பதாகைகளை ஏந்தி கவன ஈர்ப்பு முழக்கங்களை எழுப்ப வேண்டும் என அதிமுக தொண்டர்களை, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.