அகமதாபாத் விமான விபத்து – டாடா சன்ஸ் தலைவருக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம்!

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த மருத்துவ மாணவர்கள் குடும்பத்திற்கு ஆதரவு அளிக்க வலியுறுத்தி டாடா சன்ஸ் தலைவருக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் நேற்று முன்தினம் (ஜுன் 12) மதியம 1.38 மணியளவில் லண்டனுக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் 230 பயணிகள், 10 பணியாளர்கள் மற்றும் 2 விமானிகள் என மொத்தம் 242 பேர் இருந்தனர். புறப்பட்டசில நிமிடங்களிலேயே அந்த விமானம் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் பயணித்த ஒருவரை தவிர மற்ற 241 பேர் உயிரிழந்தனர்.

விமானம் விழுந்ததில் பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதியில் சாப்பிட்டுக்கொண்டிருந்த 10 மாணவர்கள் உட்பட 29 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த மருத்துவ மாணவர்கள் குடும்பத்திற்கு ஆதரவு அளிக்க வலியுறுத்தி டாடா சன்ஸ் தலைவர் N. சந்திரசேகரனுக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

“சமீபத்திய சம்பவத்தில் துயரமாக உயிரிழந்த பயணிகளின் குடும்பங்களுக்கு ஏர் இந்தியா நிறுவனம் ரூ.1 கோடி இழப்பீடு அறிவித்ததற்கும், பிஜேஎம்சி கல்லூரி விடுதியை புதுப்பிப்பதற்கு நீங்கள் தாராளமாக ஆதரவளித்ததற்கும் இந்திய மருத்துவ சங்கம் – குஜராத் மாநிலக் கிளையின் சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

விபத்தில் காயமடைந்த அல்லது உயிரிழந்த மருத்துவ மாணவர்களுக்கு நிதி உதவி மற்றும் தேவையான ஆதரவை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இந்த நபர்கள் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல, நமது சுகாதார அமைப்பின் எதிர்கால தூண்களும் கூட, அவர்களின் நல்வாழ்வு மற்றும் குடும்பங்களும் இதேபோன்ற கவனிப்பு மற்றும் ஆதரவைப் பெற வேண்டும். அதன்படி, காயமடைந்த மற்றும் உயிரிழந்த மருத்துவ மாணவர்களுக்கு உடனடியாக இதேபோன்ற உதவியை அறிவிக்குமாறு நாங்கள் உங்களை மனதார கேட்டுக்கொள்கிறோம்”

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.